தொலை தூரம் பறந்து
சிறகு முறிந்த
பறவையாய்
அந்தரத்தில்
அவதியுறுகிறது
நம் சமூகம்
இப்போதுகளில்...
இருள் கவ்விய
வானத்தின்
வைகறைக்கு
முன்னமே
குத்து விளக்காகி,
கிளை பரப்பி,
சமூகம் பயணிக்க
ஒளி வர்த்திகள்
சுமந்த தலைவனே!
வாழ கொள்கை
அமைக்கும் பலருள்
கொள்கைக்காய்
வாழ்வமைத்து
மரம் போல் கிளைத்து
அரசியலுக்கு
அர்த்தம் கொடுத்த
கொள்கைவாதியே!
உன் மரம்
பாதசாரிக்கு
வழிகாட்டியது,
பாதைக்கு
நிழல் கொடுத்தது,
பறவைக்கு
வீடு கொடுத்தது
உன்னைப் போலவே...
'நீ எனும்
நான்' தந்து
அடையாளமான
கவிஞனே...!
கல்லரை கட்டி
வணங்குவர்
என அஞ்சியா
நீ காற்றோடு
கலந்து போனாய்...
மறைந்து போன
உம் வாழ்வு குறித்து
மறக்க முடியாதபடி
தொடர்கிறது
இன்னும்
இந்த வானம்...
சோனக தேசத்தின்
சுதந்திரப்
போராட்ட வீரனே...
நீ மரணிக்கவில்லை
என பொய் சொல்லி
வளர்க்கிறோம்
நம் பிஞ்சுகளை...
ஒவ்வொரு
விடியலின்
ஓரத்திலும்
நீ வாழ்கிறாயென்ற
போலி
நம்பிக்கையொன்றை
முடிச்சிட்டுக்கொண்டு
நகர்கிறது
நம் வாழ்வு
நீ மரணிக்கவில்லை
மறைந்திருக்கிறாய்
நம் எதிர்காலங்களில்...
மறைந்திருக்கிறாய்
நம் எதிர்காலங்களில்...
விழிம்பு நிலை
சமூகத்தை
கரை சேர்த்திய
படகும் நீ...
துடுப்பும் நீ...
படகோட்டியும் நீ...
உன்பற்றிய
நினைவுகள்
மரணிக்காது
ஒரு போதும்
நினைத்து நினைத்தே
நாம் மரணித்தாலும்...
நினைவுகள்
மரணிக்காது
ஒரு போதும்
நினைத்து நினைத்தே
நாம் மரணித்தாலும்...
23.05.2010
இஸ்பஹான் சாப்தீன்
(தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடான "கனவுகள் கலைக்கப்பட்ட அஷ்ரப் எனும் அடையாளம்" <தொகுப்பில் பக்கம் 31,32,33> அச்சான கவிதை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக