ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

என் மணவாழ்க்கை...












என் சொல் இணைவுகளால்
உருவான இப் பிணைவுகள்
என் இறந்த நினைவுகளின்
வாடையை அதிகமாய்
சுமந்திருக்கிறது.


சொல்ல முடியாத
உணர்வுகளின் பாசையை
கவியூடகத்தால்
துயர வரி கொண்டு
இறக்கி வைக்கிறேன்.
இப்படியாக...


புரட்டும் பக்கமெல்லாம்
பெண் பற்றிய
வர்ணிப்புகள் பிரமாதம்
புலரும் வாழ்வின்
ஒவ்வொரு நொடியிலும்
எனக்கோ
புறக்கணிப்புகள் ஏராளம்!


பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
நேரடி வாரிசு நான்
கல்யாண அகதியாய்(!)
மாறும் வரை...


சந்தேகப் பார்வையால்
சந்தோசமிழந்த கைதியாய்
வீட்டுச் சிறையில்...
தேகப்பசி தீர்க்க மட்டுமே
விலங்கு கழற்றப் படுகிறது.


வெட்டுக்கும்
பிராண்டலுக்கும்
அறைக்கும் நடுவே
தச்சனுக்கு அகப்பட்ட
மரத்தைப் போல வாழ்கிறேன்.



சோகை இழந்த முகத்தை
ஜோடித்துப் பார்க்கும்
ஒரு முதிய அழகியைப் போல்
நானும் முயற்சி செய்து
புன்னகைக்கிறேன்.
என் தோழிகளை
எப்போதாவது சந்திக்கையில்...



எனக்கு மட்டுமே தெரிந்த
இத்துயர வாழ்வை
நீயும் அறி!
இத்தாள் அதற்காகத்தான்.


இது எனதான வாழ்வின்
துயர கீதம்
இக் கீதம் உனதாகவும்
சிலபோது இருக்கலாம்.



'உரமாகும் சருகுகள்'
சஞ்சிகைக்காக எழுதியது.

2010
இஸ்பஹான் சாப்தீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக