திங்கள், 24 செப்டம்பர், 2012

மறைந்த தலைவருக்கு...

 
தொலை தூரம் பறந்து
சிறகு முறிந்த
பறவையாய்
அந்தரத்தில்
அவதியுறுகிறது
நம் சமூகம்
இப்போதுகளில்...


இருள் கவ்விய
வானத்தின்
வைகறைக்கு
முன்னமே
குத்து விளக்காகி,
கிளை பரப்பி,
சமூகம் பயணிக்க
ஒளி வர்த்திகள்
சுமந்த தலைவனே!


வாழ கொள்கை
அமைக்கும் பலருள்
கொள்கைக்காய்
வாழ்வமைத்து
மரம் போல் கிளைத்து
அரசியலுக்கு
அர்த்தம் கொடுத்த
கொள்கைவாதியே!


உன் மரம்
பாதசாரிக்கு
வழிகாட்டியது,
பாதைக்கு
நிழல் கொடுத்தது,
பறவைக்கு
வீடு கொடுத்தது
உன்னைப் போலவே...


'நீ எனும்
நான்' தந்து
அடையாளமான
கவிஞனே...!
கல்லரை கட்டி
வணங்குவர்
என அஞ்சியா
நீ காற்றோடு
கலந்து போனாய்...


மறைந்து போன
உம் வாழ்வு குறித்து
மறக்க முடியாதபடி
தொடர்கிறது
இன்னும்
இந்த வானம்...
சோனக தேசத்தின்
சுதந்திரப்
போராட்ட வீரனே...


நீ மரணிக்கவில்லை
என பொய் சொல்லி
வளர்க்கிறோம்
நம் பிஞ்சுகளை...


ஒவ்வொரு
விடியலின்
ஓரத்திலும்
நீ வாழ்கிறாயென்ற
போலி
நம்பிக்கையொன்றை
முடிச்சிட்டுக்கொண்டு
நகர்கிறது
நம் வாழ்வு


நீ மரணிக்கவில்லை
மறைந்திருக்கிறாய்
நம் எதிர்காலங்களில்...

 
விழிம்பு நிலை
சமூகத்தை
கரை சேர்த்திய
படகும் நீ...
துடுப்பும் நீ...
படகோட்டியும் நீ...

உன்பற்றிய
நினைவுகள்
மரணிக்காது
ஒரு போதும்
நினைத்து நினைத்தே
நாம் மரணித்தாலும்...


23.05.2010
இஸ்பஹான் சாப்தீன்
 
 
(தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடான "கனவுகள் கலைக்கப்பட்ட அஷ்ரப் எனும் அடையாளம்" <தொகுப்பில் பக்கம் 31,32,33> அச்சான கவிதை.)


 

திங்கள், 17 செப்டம்பர், 2012

உறவு

உறவுகளை
தொலைத்து
தொலைவுகளை
தொடர்பு படுத்திய
விஞ்ஞானம்.


கூட்டத்திலும்
தனிமையை
உணர்கிறேன்..!
இது என்
மெஞ்ஞானம்.


இஸ்பஹான் சாப்தீன்

புதன், 29 ஆகஸ்ட், 2012

ஈத் முபாரக்..!


பசித்திருந்த
உடலும்
புசித்திருந்த
உள்ளமும்

சந்தோசிக்கும்
திரு நாள்
சங்கை மிகு
பெரு நாள்.

இன்று,
இகம் வளர
ஈகை வழங்கி
அகம் குளிர
வாழ்த்துகிறேன்.

இஸ்பஹான் சாப்தீன்.
2012.08.18

ஞாயிறு, 17 ஜூன், 2012

தந்தை!

அன்று,
நான்
எழுந்து நிற்க,
சுட்டு விரல் நீட்டி
வலக் கையில்
பிடிமானம்
தந்தவர்.


இன்று,
நான்,
சுட்டுவிரல் நீட்ட
வாழ்க்கையில்
பிடிமானம்
தந்தவர்.


என்றும்
நான்,
எழுந்து நின்று
சுட்டுவிரல் காட்ட
என் வையகத்தின்
தன்மானம்!
'தந்தை' அவர்.


கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்.
2012.06.17

புதன், 16 மே, 2012

ஆணழகன்.

ஏர் தூக்கி
எட்டுப் போட்ட
உந்தன்
மரக்குற்றிக்
கட்டுடம்பும்,



சூரியன் தயாரித்த
முதற்தர
எண்ணையாம்..
வியர்வை படிந்த
உந்தன்
பளிச்சிடும்
கறு நிறமும்,



மேடையில்..
உள்ளாடையுடன்
உடம்பு காட்டும்
ஆணழகனை
தோற்கடிக்கிறது
உழவனே!



இஸ்பஹான் சாப்தீன்,கவிதை அரங்கம்- தினகரன்.
2005.12.17

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

என் மணவாழ்க்கை...












என் சொல் இணைவுகளால்
உருவான இப் பிணைவுகள்
என் இறந்த நினைவுகளின்
வாடையை அதிகமாய்
சுமந்திருக்கிறது.


சொல்ல முடியாத
உணர்வுகளின் பாசையை
கவியூடகத்தால்
துயர வரி கொண்டு
இறக்கி வைக்கிறேன்.
இப்படியாக...


புரட்டும் பக்கமெல்லாம்
பெண் பற்றிய
வர்ணிப்புகள் பிரமாதம்
புலரும் வாழ்வின்
ஒவ்வொரு நொடியிலும்
எனக்கோ
புறக்கணிப்புகள் ஏராளம்!


பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
நேரடி வாரிசு நான்
கல்யாண அகதியாய்(!)
மாறும் வரை...


சந்தேகப் பார்வையால்
சந்தோசமிழந்த கைதியாய்
வீட்டுச் சிறையில்...
தேகப்பசி தீர்க்க மட்டுமே
விலங்கு கழற்றப் படுகிறது.


வெட்டுக்கும்
பிராண்டலுக்கும்
அறைக்கும் நடுவே
தச்சனுக்கு அகப்பட்ட
மரத்தைப் போல வாழ்கிறேன்.



சோகை இழந்த முகத்தை
ஜோடித்துப் பார்க்கும்
ஒரு முதிய அழகியைப் போல்
நானும் முயற்சி செய்து
புன்னகைக்கிறேன்.
என் தோழிகளை
எப்போதாவது சந்திக்கையில்...



எனக்கு மட்டுமே தெரிந்த
இத்துயர வாழ்வை
நீயும் அறி!
இத்தாள் அதற்காகத்தான்.


இது எனதான வாழ்வின்
துயர கீதம்
இக் கீதம் உனதாகவும்
சிலபோது இருக்கலாம்.



'உரமாகும் சருகுகள்'
சஞ்சிகைக்காக எழுதியது.

2010
இஸ்பஹான் சாப்தீன்.

புதன், 18 ஏப்ரல், 2012

எனக்கும் 'ஒரு சுயம்'

ஒரு கையால்
அபத்தை மறைத்தபடி,
மறுகையால் விரலை
ருசித்தபடி நிற்கும்
ஒரு தெருவோரச்
சிறுவனாய்...



அல்லது,


கிழிந்த பாவாடையை
சரி செய்தபடி
'அவருக்காய்'
காத்திருக்கும்
ஒரு ராப்பிச்சைக் காரியாய்...



அல்லது,


பயணத்தில்
பக்கத்து இருக்கையில்
'அவள்' உரசுகையில்,
அறியாப் பருவத்தில்
விரும்பிக் கட்டிய
காவியுடையை
முறைத்துக் கொள்ளும்
ஒரு பிக்குவாய்...



அல்லது,


பருத்த மார்பகங்களை
அதிசயமாய்ப்
பார்த்தபடி
கேவிக் கேவி அழும்
சேயைச் சுமந்த
ஒரு குழந்தைத் தாயாய்...



உள்ளது,

எனக்கும் 'ஒரு சுயம்'
அதோ...
அங்கே...
மலர்களைக் கொய்தபடி,
முற்களில் நடந்தபடி
ஒரு புனித யாத்திரையில்...



இஸ்பஹான் சாப்தீன்
2010
(ஓரத்து சமூகங்கள்
தரும் ஈரமான வரிகள்)

திங்கள், 16 ஏப்ரல், 2012

அழகான இருட்டு கறுப்பு வெளிச்சம்.














இந்த நவீன அறையில்...
அழகான இருட்டு
கறுப்பு வெளிச்சம்.
எவளையும் எவனையும்
சாப்பிடலாம்...
ஏப்பம் போகும்...
பசி தணிகிறதா..?



இக்காலையில்
சூரியனுக்கும்
சுக்கிலம் வடிகிறது
அதனால் தானோ...
இத்தனை குழந்தைகள்
முன் விலாசமில்லாமல்...



நேற்றிரவு...
எவனோ,

உட்கதவுப் பூட்டையும்
திறந்திருக்கிறான்...
பூட்டும் திறந்து கொடுத்திருக்கிறது.

நாம் கண்கள் திறந்து
தூங்கிக் கொண்டிருந்தோம்
கயிறுகளில்...



'சிக்மன் ஃபுரைட்'
மெய் சொல்லியிருக்கிறான்.

"மனிதன் ஒரு பாலியல் பிராணி"
தீப்பந்தங்களின்றி வெளியேறும்(?)
இரண்டாம் ஜாமத்தில்
உண்மையாகிறது...



ஒன்று மட்டும் புரிகிறது,
'டார்வின்'

பொய் சொல்லியிருக்கிறான்.
"பரிணாமம் வீழ்ச்சியடைகிறது"
மனிதன் குரங்காகிற(து)



இப்போது...
மற்றொன்றும் புரிகிறது!




முன்னால் பெரீய கதவு,
பெரீய பூட்டு,
ஆயினும் நுழையலாம்.

ஒரு கோமாளியின்
கல்லறையாய்
கற்புகளும் மாறிவிட்டன

சுற்றும் திறந்தே வைத்திருக்கிறார்கள்
நவீன பெண்கள்
மிக நல்லவர்கள்(?).



கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்
2010

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மீள்தல் குறித்து...

ஆத்மவுலகில்
வாக்களித்தது எதுவோ...
அதற்காய்...


சூடு பட்ட குதிரையாய்...
தலை தெறிக்க ஓடுகிறது
எனதாத்மா,
உனை நோக்கியே...


எனதாத்மா
காதலிக்கிறது...
எனதாத்மா
பரவசமடைகிறது...
எனதாத்மா
உனைப் புகழ்வதில்
மரணத்தையும் தாண்டி
வாழ்கிறது.


உனை நினைப்பதில்
எனதாத்மா
சாந்தி பெறுகிறது.


யாரும் பார்க்காத
எனதாத்மாவை
நீ காண்கிறாய்...


அரவணைக்க
உறவுகளற்ற பின்னும்
உன் நினைவுகளே
அதற்கு ஆறுதல்.


ஆத்மா சொல்கிறது...
நீ மகா சக்தி...
நீ புகழ்...


உனைப்புகழ்கிறேன்...
உனையே நினைக்கிறேன்...

சனி, 14 ஏப்ரல், 2012

நாகரிகத் தடை!

எனதான தேசம்,
அழகான சாலை,
பொடி நடை பயிலலாம்...
சுவடு பதிக்க மட்டும்
சுதந்திரமில்லை...

சப்பாத்து அணிவித்திருக்கிறார்கள்.

இஸ்பஹான் ஷாப்தீன்.

2008.01.25
படத்திற்கான கவிதை,
றாபிதா கலமியா

புதன், 11 ஏப்ரல், 2012

சுனாமி...? (Tsunami..?)


முட்டையோடு வெடித்தால்
உயிர் வரும்,
புவியோடு வெடித்தால்
உயிர் போகுமென
நானறியேன்!

வலை வீசினால்
மீன் கிடைக்கும்,
அலை வீசினால்
பிணம் கிடக்குமென
நானறியேன்!

வரப்புயர
நீருயரும்,
வரம்புமீற
அலையுயருமென
நானறியேன்!

கவிஞர் இஸ்பஹான் ஷாப்தீன்

(சுனாமி பாதிப்பிற்குப் பின் 2005 ல் "காலி எப்.எம்" ல் வாசித்த கவிதை)

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

மனைவி..........(வெற்றிடம்)

எனக்கொரு மனைவி தேவை!

அவள்,
இந்த உலகத்துக்கு
அழகானவளாக
இருக்கத் தேவையில்லை..!

என் உலகத்தை
அழகாக்குபவளாக
இருக்க வேண்டும்...!

அவளே...
என் உலக அழகி!

இஸ்பஹான் ஷாப்தீன்
2012.04.10

(ஆங்கிளக் கூற்றொன்றைத் தழுவி எழுதிய கவிதை)

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

மீண்டும் சந்திக்கலாமே...

'புரியாத பிரியம்
பிரியும் போது
புரியும்' என்பர்.
புரிந்த பிரியம்
பிரியும் போது
எரிகிறது என்னிதயம்...


இறைவனுக்காய்க்
கொண்ட உறவில்
பிரிவென்பது பொய்யாகிறது.


நானும் நீயும்
முடிச்சிடப்பட்ட ஒரு கயிற்றின்
இரு அந்தங்கள்
தூரமாகும் போதுதான்
இறுகுகிறது...
நம் உறவு முடிச்சு
அதிகமாய்த்தூரமாகி
அறுத்துவிடாதே...!


இருப்பினும்...
பிரிவுகள் நிரந்தரமல்ல.
மீண்டும் சந்திக்கலாமே...
அவனர்ஷின் நிழலில்...
மஹ்ஷர் வெளியில்...


20090301